தென்கொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, சிறப்பு இசை நிகழ்ச்சியை இசைக்கலைஞர்கள் நடத்தினர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள மக்களுக்காக வயலின் இசைக்கலைஞரான வோன் ஹியூங் ஜூன் தனது வீட்டில் இருந்தப்படி, பாரம்பரிய வயலின் இசையை மீட்டி அதனை சமூகவலைதளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிப்பரப்பி வந்தார்.
இதனை கண்ட தென்கொரியாவின் மியோங்ஜி மருத்துவமனையில் கலை மற்றும் குணப்படுத்தும் மையத்தின் ஊழியரான லீ சோ யங், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோருக்கு இசை நிகழ்ச்சி நடத்த முடியுமா என வோன் ஹியூங் ஜூனிடம் கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மூதாட்டி, ஒரு பெண் மற்றும் அவரது மூன்று மாத குழந்தை என கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே ஹியூங் ஜூன் தலைமையிலான இசைக்குழுவினர் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.